யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்குதல் நடாத்திய குழு தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அதன்படி இந்த வாள் வெட்டுத் தககுதலானது ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் உறுப்பினர்களைக் கொண்ட ஆயுதக் குழுவொன்றின் தாக்குதல் என்பது இதுவரையிலான விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
இந் நிலையில் நேற்று முன் தினம் பொலிஸார் மீது தககுதல் நடாத்திய குழுவில் 15 பேர்வரை இருந்துள்ளமையை விசாரணையில் வெளிப்படுத்திக்கொண்டுள்ள பொலிஸார், அந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்பதை பொலிஸார் அடையாளம்
கண்டுள்ளனர்.
அத்துடன் குறித்த பிரதான சந்தேக நபர் ஆவா பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் வீரகேசரி இணையத்திற்கு தெரிவித்தார். அத்துடன் இந்த விடயத்தை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் உறுதி செய்தார்.
வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் கட்டுப்பாட்டில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகியோரின் மேற்பார்வையில் 6 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
அந்த பொலிஸ் குழுக்களின் ஆரம்பகட்ட விசாரணைகளிலேயே பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் அடையாளம் காணப்பட்டோரை கைது செய்யவும் மேலதிக நடவடிக்கைகள்
முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நேற்று நண்பகல் தம்மிக, சுரேன் ஆகிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்காக கொக்குவில் பகுதிக்கு தமது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இதன்போது கொக்குவில் நந்தாவில் பகுதியில் உள்ள பற்றைக்காட்டு பகுதியில் சிலர் மது அருந்தி குழப்பத்தில் ஈடுபடுகின்றார்கள் என குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அப் பகுதிக்கு சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அங்கு சில இளைஞர்கள் மது அருந்திகொண்டிருப்பதையும் அவர்களிடம் வாள் போன்ற ஆயுதங்கள் இருப்பதனையும் அவதானித்ததுடன் இருவரும் அங்கிருந்து திரும்பி பொலிஸ் நிலையம் நோக்கி
சென்றுள்ளார்கள்.
இச்சமயத்திலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த கும்பலொன்று அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்தியுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் மூகங்களை மூடிக் கொண்டுவந்த பத்துக்கும் மேற்பட்ட இனந்தெரியாத குழுவொன்று இவர்களை துரத்தி துரத்தி வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இரு பொலிஸ் உத்தியோகத்தரில் ஒருவருக்கு இடது கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் தப்பி ஓட முற்பட்ட போதும் சந்தேக நபர்கள் அவரை துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர்.
இந் நிலையில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், இன்று நண்பகலாகும் போது சந்தேக நபர்கள் ஏழு பேரை அடையாளம் கண்டுள்ளனர்
குறிப்பாக சம்பவம் தொடர்பில்
சந்தேக நபர்கள் 7 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக கண்டறிந்துள்ள பொலிஸார் ஒவ்வொரு மோட்டார் சைக்கிள்களிலும் 2 அல்லது மூன்று பேர் இருந்துள்ளதை சாட்சிகள் ஊடாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அதன்படி குறைந்த பட்சம் 15 பேர் கொன்ட குழு இந்த தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் அனைவரையும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர விஷேட திட்டம் ஒன்றினை வகுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முதலில் சந்தேக நபர்கள் இரு மோட்டார் சைக்கிள்களில் மூவர் வீதம் பொலிஸாரை துரத்தி வந்து பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிளை இடை மறித்து அவர்களை அவர்களது மோட்டார் சைக்கிளுடன் வீழ்த்தியுள்ளதாகவும் பின்னர் வாளால் துரத்தித் துரத்தி வெட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் போது மேலும் 4 முதல் 5 மோட்டார் சைக்கிள்களில் சந்தேக நபர்கள் அங்கு வந்துள்ளமையும் அங்கு பொலிஸார் மீதான தககுதலில் பங்கேற்றுள்ளமையும் விசாரணைகளில்
உறுதியாகியுள்ளது.
இந் நிலையிலேயே பிரதான சந்தேக நபர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனவும் ஆவா குழுவினது முக்கிய செயற்பாட்டு உறுப்பினர் எனவும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக