யாழ். வடமராட்சி, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸார் மீது பக்கச்சார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள பொலிஸாரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளோம். அவர்கள் கூறுவதை மட்டும் கவனத்தில்
எடுக்க முடியாது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினர்களின் கருத்துகளையும், வாக்குமூலங்களையும் பெற்றுக்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளோம். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் முதலில் கொண்டு செல்லப்பட்ட அம்பன் மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலையிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.
வாகனம் தொடர்பிலும் அதில் பயணித்ததாகக் கூறப்படும் 5 பேர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவங்கள் பற்றிய மேலதிக தகவல்களைக் வாகனத்தில் பயணித்தவர்களிடமே பெறவேண்டியுள்ளது.
அவர்களது தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டே பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்தலாம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். வடமராட்சி, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக