யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக பச்சை மிளகாய் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் யாழ். விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். குடாநாட்டின் வலிகாமம் தெற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் மேற்கு, வலிகாமம் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வருடம் வழமையை விட அதிகமான விவசாயிகள் பெரும்போக மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிளகாய்ச் செய்கை வைரஸ் தாக்கத்திற்குள்ளானது.
குறித்த வைரஸ் தாக்கத்தினால் பல விவசாயிகள் பாதிப்பினை எதிர்நோக்கிய போதும் தற்போது நோய்த் தாக்கம் குறைவடைந்துள்ளது. இதனால், மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்போது பச்சை மிளகாய்களைப் பிடுங்கிச் சந்தைப்படுத்துவதில் அதிக ஆர்வம்
காட்டி வருகின்றனர்.
யாழில் இம்முறை பச்சை மிளகாய் விளைச்சல் அமோகமாகக் காணப்படுகின்ற போதும் விலைகள் சடுதியாகக் குறைவடைந்து காணப்படுகின்றது. யாழ். குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச்சந்தை உள்ளிட்ட சந்தைகளில் இன்றைய தினம்(03) ஒரு கிலோ பச்சை மிளகாய் 25 ரூபாவாக விவசாயிகளிடமிருந்து வியாபாரிகளால் கொள்வனவு
செய்யப்பட்டது.
விலை வீழ்ச்சியால் தென்னிலங்கையின் முக்கிய பொருளாதாரச் சந்தையான தம்புள்ளைப் பொதுச்சந்தைக்கு யாழ். விவசாயிகளால் கொண்டு செல்லப்படும் பெருந்தொகை பச்சை மிளகாய்களைச் சந்தைப்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை
தெரிவிக்கின்றனர்.
புத்தளம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்தும் அதிகளவு மிளகாய்கள் விவசாயிகளால் தம்புள்ள பொதுச்சந்தைக்குத் தற்போது எடுத்துவரப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பச்சை மிளகாய் விலைகளில் ஏற்பட்டுள்ள விலைச் சரிவால் மிளகாய்களைப் பழுக்க விட்டுச் செத்தல் மிளகாய்களாக்கும் முயற்சியில் தற்போது விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதேவேளை, தாம் உற்பத்தி செய்யும் பச்சை மிளகாய்களைச் நியாயமான விலையில் சந்தைப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென யாழ். விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக