வன்முறைகளை கட்டுப்படுத்த யாழில் நூற்றுக்கணக்கான பொலிஸார்

வியாழன், 5 ஜூலை, 2018

யாழ்குடா நாட்டில் அதிகரித்துள்ள சமூக சீர்கேடுகள் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 100 பொலிஸார் மேலதிகமாக அனுப்பட்டுள்ளனர்.
சமூக சீர்கேடுகளையும் வன்முறைகளையும் கட்டுப்படுத்தும் பொலிஸாரின் நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டுத் தாக்குதல்கள், பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் துரிதமாக அதிகரித்துள்ளன.
இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கூறியமை பாரிய சர்ச்சையை தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்வதற்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் யாழ் பொலிஸாருடன் இணைந்து செயற்பட மேலதிகமாக 100 பொலிஸார் யாழ் மாவட்டத்திற்கு அனுப்பட்டுள்ளனர்.
வன்முறைகளைக் கட்டுப்படுத்த வசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ 
சுட்டிக்காட்டினார்.
விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வரவழைக்கப்பட்டுள்ள மேலதிக பொலிஸாருக்கான வாகனங்களும் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,
”ஆவா குழுவில் உள்ளவர்களின் சகோதரர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர். அவர்களின் சகோதரர்கள் விடுதலைப் புலிகளின் காலத்தில் வெளிநாட்டுக்கு சென்றனர். இங்கு இருப்பது அவர்களின் தம்பிமார். வெளிநாட்டுக்கு சென்ற அவர்களின் அண்ணன்மார்களிடம் பணம் உள்ளது
. சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு இரண்டு மூன்று இலட்சங்கள் கொடுப்பது அவ்வளவு பெரிய விடயம் அல்ல. தம்பிமார் பாடசாலை கல்வியை முடித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் இளைஞர் கூட்டத்துடன் இணைந்து சுற்றுகின்றனர்.
இது வேலையில்லாப் பிரச்சினை. வேலைவாய்ப்புக்கள் இருக்க வேண்டும். பாடசாலைகளில் இருந்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்கள் இல்லை. ஆவா குழுவிலுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி, அவர்களை அதில் ஈடுபடுத்த முடியுமானால் அது சிறந்தது. ஆவா குழுவிலுள்ள அசோகன் என்பவர் தப்பிச் சென்று தலைமறைவாகி வாழ்ந்துவருகின்றார். தலைமறைவாகிய பின்னர் சுகபோகமாக அவர்கள் வாழவில்லை
. மிகவும் துன்பப்படுகின்றனர். கொழும்பிற்கு சென்று ஆவா குழுவில் இருந்த ஒருவரை பிடித்துவந்தோம். சிறிய இடமொன்றில் கூலிவேலை செய்து, மிகவும் சிரமப்பட்டு தலைமறைவாகி வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் மிகப் பெரிய வன்முறையாளர்கள் அல்ல. அதன் பின்னர் தப்பிச் சென்று கூலி வேலை செய்து வாழ்கின்றனர்.
வெளிநாட்டு தொடர்புகள் உள்ள ஆவா குழு போன்றவர்கள் தொடர்பான விடயங்களும் தெரியவந்திருந்தது. கிராமங்களில் கத்திபோன்ற ஆயுதங்கள் இருக்கின்றன. அதனை எங்காவது மறைத்து வைத்துவிட்டு, அதனை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்களில் சுற்றுகின்றனர். இளைஞர்களுக்குரிய சண்டித்தனம் மேலோங்கிய பின்னர் கத்தியுடன் சென்று வன்முறையில் ஈடுபடுகின்றனர்.” என்றார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக