வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் அரசு கவனம் செலுத்தும் என்றும், ஆரம்ப கட்டமாக வடக்கிலிருந்து ஆயிரம் பேர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக தொழில்களை வழங்குமாறு அரசை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனால் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டு வரப்பட்டது
இந்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அரசின் சார்பில் மேற்படி உறுதிமொழியை வழங்கினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கில் பட்டதாரிகள் மட்டுமல்ல, இளைஞர்களும் வேலையின்றி இருக்கின்றனர். இந்தப் பிரச்சினை சம்பந்தமாக அரசு கவனம் செலுத்தியுள்ளது.
முதலீடுகள் வரவழைக்கப்படும். ஆரம்ப கட்டமாக ஆயிரம் பட்டதாரிகளுக்கு வடக்கில் வேலை வழங்கப்படும். அதன் பின்னர் கிழக்கில் உள்ளவர்களின் குறைகளும் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அரச நிர்வாகத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் வேலைகோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரச பிரதிநிதிகளை அனுப்பித் தகவல்களைத் திரட்டினேன்.
போருக்குப் பின்னர் வடக்கிலுள்ள பலருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், சுமார் 9 ஆயிரம் வரையான பட்டதாரிகளுக்கு வேலையில்லை என்பதையும் ஏற்கவேண்டும். எனவே, இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
கடந்தகாலங்களில் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அரச முகாமைத்துவ சேவைக்கு 5 ஆயிரம் பேர் இணைத்து
கொள்ளப்படவுள்ளனர்.
இதற்கான பரீட்சை 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் போதும் வடக்கு, கிழக்கில் உள்ள பட்டதாரிகள் உள்வாங்கப்படுவர். ஏனைய துறைகளிலும் வெற்றிடங்கள் இருக்கின்றன. அத்துறைகளுக்கும் பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் போர் காரணமாக 35 வயது தாண்டிய பட்டதாரிகளும் இருக்கின்றனர். இவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். சமுர்த்தித் துறைக்கு வடக்கு, கிழக்கில் இருந்து மாத்திரம் ஆயிரத்து 500 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர் என தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக